கோடை வெயிலிற்கு சிறந்த குளிர்பானங்கள் - Best cooldrinks for summer
கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், வெயிலின் தாக்கமும் உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த காலத்தில் நமது உடலை பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்கு குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். அவை இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள் என்றால் மிகவும் சிறந்தது.
அந்த வகையில், உடலுக்கு குளிர்ச்சியை அளித்து புத்துணர்ச்சியூட்டும் பானங்கள் பற்றி பார்போம்.
மோர்:
ஒரு புரோபயாடிக்(Probiotic) பானமாகும், இது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால் கோடையில் நம்மை அதிகம் பாதிக்கும் வயிற்று தொற்றுகளைத் தடுக்கிறது. ஒரு கிளாஸ் (200 மில்லி) மோரில் சுமார் 30 கலோரிகள் (Calories) உள்ளன. ஒரு மண் பானையில் மோர் சேமித்து வைப்பது ஒரு தனித்துவமான சுவையை அளிக்கும் அதே வேளையில் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
இளநீர்:
கோடைக்காலம் என்றாலே, நம் நினைவுக்கு வருவது இளநீர் தான். எலக்ட்ரோலைட்டுகளால் (Electrolytes) நிரம்பியது. குறைந்த சர்க்கரை அளவு கொண்டது, ஒவ்வொரு கிளாஸ் இளநீர் 30 கலோரிகள் (Calories) கொண்டது.
ஜல்ஜீரா:
இந்த பானம் சீரக நீர், இது மற்றொரு கோடைகால பானமாகும். ஒரு கிளாஸ் ஜல்ஜீராவில் வெறும் 7 கலோரிகள்(Calories) உள்ளன. இது சீரகம், இஞ்சி, கருப்பு மிளகு, புதினா ஆகியவற்றின் கலவையாகும். சீரகம் நார்ச்சத்து(Fibre), வைட்டமின்கள் (Vitamins) அதிக அளவில் கொண்டது. சீரகம் அஜீரணம் மற்றும் குமட்டல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும். அதில் சேர்க்கப்படும் புதினா இலைகள், வெப்பத்தில் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
வெள்ளரி ஜூஸ்:
கோடை காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு காய்கறியாக வெள்ளரிக்காய் உள்ளது. இது கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் மிகவும் பயனுள்ள ஒரு காய்கறியாக உள்ளது. இவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே,(Vitamin A,B,C and K) மாங்கனீசு(Manganese), காப்பர்(Copper) மற்றும் பொட்டாசியம்(Potassium) போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதய நோய் அபாயத்தை குறைத்தல், ஆரோக்கியமான எடை மேலான்மை, உடலை நச்சுத்தன்மையிலிருந்து வெளியேற்றுதல், கண் ஆரோக்கியத்தை பராமரித்தல், இரத்தத்தை சுத்தம் செய்தல் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சையளித்தல் போன்ற பல ஆரோக்கிய நமைகளை வெள்ளரிக்காய் உள்ளடக்கியுள்ளது. இதில் 96% தண்ணீர் உள்ளது. ஒரு கிளாஸ் வெள்ளரி ஜூஸில் சுமார் 45 கலோரிகள் (Calories) உள்ளன.
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் : பெரியது 1 (அ) சிறியது 2
உப்பு (அ) கருப்பு உப்பு : ஒரு சிட்டிகை
எலுமிச்சை சாறு : 1 (அ) 2 தேக்கரண்டி
தேன் : 1 1/4 தேக்கரண்டி
சீரகப் பொடி : 1/4 தேக்கரண்டி
புதினா : 8 முதல் 12 இலைகள்
செய்முறை:
வெள்ளரிக்காயை தோலுரித்து, சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
பிறகு அந்த சாறுடன் தேவையான அளவு கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன், புதினா மற்றும் சீரகப் பொடி ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான வெள்ளரிக்காய் ஜூஸ் தயார்.
கரும்பு ஜூஸ்:
கரும்புச் சாற்றில் அதிக அளவில் எலக்ட்ரோலைட்ஸ் (Electrolytes) உள்ளது. இவை இளநீர், குளுக்கோஸ் போன்ற பானங்களுக்கு அடுத்ததாக கரும்புச் சாறில் அதிகமாக உள்ளன. இது உடல் சோர்வடையாமல் தக்க வைக்க உதவும். நுரையீரல் செயல்பாடும் அதிகரிக்கும்.
கரும்புச் சாறில் கால்சியம் (Calcium) மற்றும் பாஸ்பரஸ் (Phosphorus) உள்ளது. இது பற்களின் உறுதித் தன்மைக்கு உதவும். மெட்டாபலிசத்தை (Metabolism) அதிகரித்து உடனடி ஆற்றலை அளிக்கும்.
கரும்புச் சாறில் 111 கலோரிகள்(Calories) நிறைந்துள்ளன. இது அதிக நார்ச்சத்து கொண்டது, கொழுப்பைக் கரைக்க வல்லது. ஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகளை சரி செய்யும்.
தர்பூசணி ஜூஸ் :
கோடைக் காலங்களில் அதிக அளவில் கிடைக்கும் பழம் தர்பூசணி. இது நீர் சத்து மிகுந்த பழம்.இதில் 92% தண்ணீர் உள்ளது. தர்பூசணியைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். அமினோ அமிலம் அதிகம் உள்ளதால் உடல் எடை குறையும். மேலும், கெட்ட கொலஸ்ட்ராலைக் (Bad Cholesterol) குறைக்கும் தன்மை உள்ளது.
ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தைக் (High blood pressure) குறைத்துவிடும். அத்துடன் ரத்தக்குழாயில் படியக்கூடிய கழிவுகளைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியைச் செய்யக்கூடியது தர்பூசணி.
மற்ற பழங்களில் இல்லாத ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் ( Phyto Nutrients) என்ற சத்து இருப்பதால் இது உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் தர்பூசணி ஜூஸில் 100 கலோரிகள்(Calories) உள்ளன.
செய்முறை:
தர்பூசணியை வெட்டும் பொழுது வெள்ளை பகுதிகள் இல்லாமல் சிவப்பு நிற பழத்தை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
தர்பூசணி விதைகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு அதற்குப் பின்னர் ஜூஸ் தயாரிக்கவும்.
ஜூஸ் செய்யும் பொழுது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
இஞ்சி சேர்க்கும் பொழுது தோலை முற்றிலுமாக நீக்கிவிட்டு அதன்பின்னர் இஞ்சியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
தர்பூசணி ஜூஸ் தண்ணீர் பதமாக இருப்பதால் ஐஸ்கட்டிகள் சேர்க்க வேண்டாம், நீங்கள் விருப்பப்பட்டால் ஐஸ்கட்டி சேர்த்துக் கொள்ளலாம் .
ஜூஸ் செய்யும் பொழுது நாட்டுச்சக்கரை, தேன் அல்லது சர்க்கரை இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் அல்லது எதுவும் சேர்க்காமலும் இயற்கையான இனிப்பு சுவையுடனும் ஜூஸ் செய்யலாம்.
கோடை காலத்தில் இது போன்ற குளிர்ச்சியான பானங்களை தினமும் செய்து பருகி வெயிலின் தாக்கத்தில் இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள். அனைவர்க்கும் நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்!!!
இதையும் பாருங்கள் - புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்! - பகுதி 1
Hi Kayali,
ReplyDeleteIt's a nice post and your information to overcome summer is useful.
நன்றி
Delete